இன்று மூன்றாம் பிறை பார்க்க தவறாதீர்கள்!

நவகிரகங்களின் ஒன்றான “சந்திரன்” பௌர்ணமி தினத்தன்று தனது ஒளி மிகுந்த ஆற்றலால், இந்த பூமியில் இரவு நேரத்தில் ஒளியையும், மனிதர்களின் மனதிற்கு இதமும் தருகின்றது. அந்த சந்திரனின் வளர்பிறை காலத்தில் வரும் “மூன்றாம் பிறை” ஒரு ஆன்மிக சிறப்பு வாய்ந்ததாகும். அந்த மூன்றாம் பிறை சந்திரனின் சிறப்பை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.


புராணங்களின் படி தக்ஷனின் மகள்களான 27 நட்சத்திரங்களையும் சந்திர பகவான் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த 27 நட்சத்திரங்களில் “ரோகிணி” நட்சத்திரத்திடம் மட்டும் மிகுந்த பிரியத்துடன் நடந்துகொண்டதால் மற்ற நட்சத்திரங்கள் வருத்தமடைந்தனர். இதைக் கண்டு கோபமடைந்த அவர்களின் தந்தை தக்ஷன், சந்திரன் 16 கலையாக தேயும் படி சபித்தார். சந்திர பகவானோ சிவ பெருமானை வழிபட்டு மீண்டும் 16 கலைகள் வளரும் வரத்தை பெற்றார். அதனாலேயே ஒரு மாதத்தில் 16 வளர்பிறை மற்றும் 16 தேய்பிறை வருகிறது.  





ஒரு மாதத்தில் 16 வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் இறுதியாக வரும் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்கள், இந்த பூமியில் வாழும் அனைத்து உயிர்களின் மீதும் ஒரு தாக்கத்தை ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக மனிதர்களின் மனநிலையில் ஒரு வித மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதை அறிவியல் விஞ்ஞானிகளும் ஆராய்ந்து உண்மை என ஏற்றுக்கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட சந்திரன், அமாவாசை தினத்திற்கு பிறகு மீண்டும் வளர்பிறை சந்திரனாக வளர தொடங்குகிறது.

 அமாவாசைக்கு மூன்றாவது நாளில் வானில் தோன்றும் சந்திரனின் மூன்றாம் பிறை ஒரு சிறப்பான தினமாகும். சிவபெருமான் இந்த மூன்றாம் பிறை சந்திரனையே, தன் முடியில் அணிகலனாக சூடியுள்ளார். 
 
இஸ்லாமியர்களும் இந்த மூன்றாம் பிறை சந்திரனை இறைவனின் அற்புதமாக போற்றுகின்றனர். இந்த மூன்றாம் பிறை சந்திரனின் தரிசனம் காண்பவர்கள் சிறந்த அறிவாற்றலையும், அபார ஞாபக சக்தியையும், நல்ல உடல் மற்றும் மன நலத்தையும் பெறுவார்கள் என்று சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளன. 
 
மாதந்தோறும் வரும் இந்த மூன்றாம் பிறை சந்திரனை வாழ்நாள் முழுதும் தரிசிப்பவர்கள் இறுதியில் சிவ பெருமானின் தரிசனத்தையும் பெற கூடும் என முனிவர்கள் கூறியுள்ளனர். எனவே ஒவ்வொருவரும் மூன்றாம் பிறை தரிசனத்தை மேற்கொண்டு அனைத்து நன்மைகளையும் பெறலாம்.
இதனை வழங்கிய ஆன்மீகப் பெரியோர்களுக்கு நன்றி!

Post a Comment

0 Comments