அதிர்ஷ்டம் தரும் ஆடி பதினெட்டாம் நாள்..?

ஆடிப்பெருக்கு (ஆடி 18) 03/08/2019 சனிக்கிழமையான இன்று அனைவராலும்பூஜிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு  வருகிறது. இன்றைய தினம் விரதமிருந்து வழிபாடு செய்வதால் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்பது பெரியோர்கள் வாக்காகும். அதிர்ஷ்டமும், அருளும் கிடைக்கப் பெறும் இந்நாளில் இல்லாதோர்க்கு  உணவு வழங்கலாம். குறைந்தபட்சம் சர்க்கரையை எறும்புகளுக்கு கொடுக்கலாம்.

இந்த நன்னாளில் புதுமண பெண்ணிற்கு தாலி பிரித்து கோர்ப்பர்கள். தாலி பாக்கியம் நிலைக்க சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கு அன்று புது தாலிமாற்றிக்கொள்வர். எந்த ஒரு புது மற்றும் நல்ல காரியங்களை ஆடிப்பெருக்கு அன்று ஆரம்பித்தால், அந்த காரியம் மேலும் மேலும் பெருகும் என்பது ஐதீகம்.

பதினெட்டு என்ற எண் வெற்றியைக் குறிக்கும். மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன. இந்த முறையிலேயே, நீர் பெருக்கெடுத்து ஓடும் நதிக்கரைகளில் பதினெட்டுப் படிகளை அமைத்த நமது முன்னோர்கள், உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும் அந்தக் காவிரி அன்னைக்கு, ஆடிப் பதினெட்டு அன்று நன்றி செலுத்தும் விதமாக விழா கொண்டாடினார்கள்.


ஆடி மாதம் 18 ஆம் தேதியில் பெருக்கு விழா, நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. தட்சிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென்திசைப் பயணத்தைக் குறிப்பிடுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப் பணிகளைத் தொடங்குவர்.

ஆடிப்பட்டம் தேடிவிதை என்று சொல்வதுண்டு. நாடு செழிக்கத் தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நதியைத் தெய்வமாகப் போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர். அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம் நாளைத் தேர்ந்தெடுத்தனர். அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடினர்.



ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, வசிஷ்ட முனிவரிடம் வழி கேட்டார். வசிஷ்டர், ‘அறுபத்தாறு கோடி தீர்த்தங்களைத் தன்னிடம் கொண்ட காவிரிக்கு, தட்சிண கங்கை என்று பெயர். அந்த நதியில் நீராடினால் உன் பாவ உணர்வுகள் நீங்கும்’ என்று கூறினார். அதன்படி ராமச்சந்திர மூர்த்தி, காவிரியில் நீராடி தன்னுடைய பாவங்களைப் போக்கிக் கொண்டார். அவர் காவிரியில் நீராடிய நாள் ஆடிப்பெருக்கு என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

அட்சய திரிதியை விட, ஆடிப்பெருக்கு நகை வாங்க உயர்ந்த நன்னாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் தொடங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும் என்பார்கள்.
இந்த ஆடிப் பெருக்கில் அதிர்ஷ்டம் பெருகி ஆரோக்கியமாக அனைவரும் நலமுடன் வாழ வேண்டும்.

Post a Comment

0 Comments