சிலை அரசியலும் சிறிய புத்திகார மனிதமும் !!

சமீபத்தில் திரிபுராவில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதும் முதலில் ப.ஜ.க செய்த அரிய பெரும் சாதனை கம்யுனிஸ தலைவர் லெனின் அவர்களின் சிலையை உடைத்தது தான். என்ன நடக்கிறது என்று திரும்பி பார்ப்பதற்குள் ஹெச்.ராஜா அவர்களின் ட்விட்டர் பதிவு, இந்த திடீர் சிலை உடைப்பு கலாச்சாரத்தை தமிழகத்திற்கும் திருப்பி விட்டது. பல்வேறு இடங்களில் பெரியாரின் சிலையை உடைக்க முயன்றார்கள். ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் என்று தமிழகமே இரு அணியாக மாறும் என்ற எதிர்பார்ப்பு சுக்கு நூறாய் உடைய, பெரும் பகுதி தமிழகம் ஹெச்.ராஜாவை முற்றுகையிட அவர் பழியை தூக்கி தனது ட்விட்டர் பக்க நிர்வாகி மீது சுமத்தி விட்டு நழுவி கொண்டார். இப்படி திடீரென உருவானது சிலை அரசியல்.


கொள்கைகள்:
ஒரு பழமொழி தான் எனக்கு நினைவுக்கு வந்தது. எதையும் அழிப்பது சுலபம், ஆனால் உருவாக்குவது தான் சிரமம். இது சிலைக்கு மட்டுமல்ல, அந்த சிலை தாங்கி நிற்கும் கொள்கைகளுக்கும் சேர்த்து தான் பொருந்தும். லெனினோ பெரியாரோ தங்கள் காலத்திற்கு பிறகு தமது அபிமானிகள் தங்களின் கொள்கைகளை நிலைநாட்டுவார்கள் என்று நினைத்திருப்பார்களே தவிர, தங்களின் சிலைகள் அச்செயலை செய்யும் என்று ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்கள். அதிலும் பகுத்தறிவு நாயகன் பெரியாருக்கு சிலை வைத்ததே ஒரு முரணான செயல். அதை உடைக்க நினைப்பதும், கட்டி காக்க நினைப்பதும் இரண்டுமே புரியாத விடயங்கள் தான்.

இச்சமயத்தில் எனக்கு ஒரு இந்தி திரைப்படம் தான் நினைவுக்கு வருகிறது. அதில் நாயகன், காந்திஜியை பற்றி விடிய விடிய கண் விழித்து படித்ததின் விளைவாக, அவர் காந்திஜி பற்றி அறிந்து கொண்ட தகவல்களை நினைவுகூரும் போது காந்திஜியின் மாய தோற்றம் அவர் கண் முன்னே தெரியும். அதை காந்திஜியே நேரில் வந்து தனக்கு கூறுவதை போல் கற்பனை செய்து கொள்வார் நாயகன். ஒருமுறை காந்திஜி பற்றிய விளக்கத்தை தனது தாத்தாவிற்கும் அவரின் நண்பர்களுக்கும் தருவதற்காக, நாயகி நாயகனை அழைத்து செல்வார். அங்கே அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு காந்திஜியே நேரில் தோன்றி பதில் சொல்வதாக யூகித்து கொண்டு நாயகன் பதிலளிப்பார்.



உள்ளங்களில் இடம்:
அப்பொழுது ஒரு முதியவர் தான் கண்ட சம்பவம் ஒன்றை பகிர்வார். அதில், அவர் ஒரு நாள் உலாவி கொண்டிருக்கும்பொழுது ஒரு இளைஞன் காந்திஜியின் சிலையை கல்லால் அடிப்பதை பார்க்க நேரிட்டதாக கூறுவார். இதற்கு என்ன செய்வது என்று கேட்பார். அப்பொழுது காந்திஜியின் உருவத்தில் வருபவர் அழகான விளக்கம் ஒன்றை தருவார். அவர் கூறுவது “ நாட்டில் உள்ள எனது சிலைகள் அனைத்தையும் உடைத்து விடுங்கள். எங்கெல்லாம் எனது புகைப்படம் இருக்கிறதோ, அவை அனைத்தையும் அகற்றி விடுங்கள். உண்மையில் எனக்கு இடம் தருவதாக இருந்தால் உங்கள் உள்ளங்களில் இடம் தாருங்கள் “ .

இன்று சிலையை உடைப்பதற்காக நடக்கும் வன்முறையும் அதை பாதுக்காக நடக்கும் வன்முறையும் பார்க்கும்பொழுது மேலே சொல்லப்பட்ட காட்சி எத்தனை பொருத்தமானது என்று உணர முடியும். சிலையை உடைப்பதினால் கொள்கைகளும் கோட்பாடுகளும் சிதறிப் போவதில்லை. சிலைகளை காப்பாற்றுவதால் சித்தாந்தங்கள் சிகரம் தொடுவதும் இல்லை. இவைகள் கொள்கைகளுக்காக நடத்தப்படும் போராட்டமாக தெரியவில்லை. சுய லாபத்திற்காக நடத்தப்படும் சூதாட்டமாகவே தென்படுகிறது. ஆனால் பாதிக்கப்படுவது என்னவோ மக்கள் தான். இவ்வாறு அரசியல் விமர்சகர் பிரபா காத்தமுத்து சிலை அரசியலை விளக்கியுள்ளார்.

Post a Comment

0 Comments