காலங்களில் இது கோடை. கவலைகளுக்கெல்லாம் இது மேடை. உடலும் சோர்ந்து உள்ளமும் சோர்ந்து கண் விழி வறளச் செய்யும் காலம். யாரைப் பார்த்தாலும் YES வங்கியில் டெபாசிட் செய்தவர்களைப் போல புலம்பும் நேரம். வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டும் ஆட்டம் ஆரம்பம். கன்னத்தில் ஹவாய் செப்பல் வைத்து யாராவது அடித்தால் விர்ரென்று உறைக்குமே அது போல் அடிக்கத் தொடங்கியிருக்கிறது கருணையற்ற வெயில். ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. மரமில்லாப் பெருநகரங்களில் ஒதுங்கவும் முடியாது. ஏசியில் தஞ்சம். பட்ஜெட்டில் பற்றாக்குறையே மிஞ்சும்.
நாடே தடை உத்தரவுக்கு ஆளானதைப் போல வெளியெங்கும் விரிச்சோடும். வீட்டில் மின் விசிறியின் ஆதிக்கத்திற்கு அடிமையாவோம். நமக்கு எல்லாக் காலமும் வெயில் காலம் தான் என்றாலும் வெயில் காலத்தில் வரும் வெயில் காலம் தான் அதிபயங்கரமானது. எலும்பில்லாத உயிர்களை வெயில் வாட்டுவதைப் போல அன்பில்லாத உயிர்களை அறம் வாட்டும் என்றொரு திருக்குறள் உண்டு. இனி நம்மை எலும்போடு ஆம்லேட் ஆக்கும் மாதங்கள் வந்து விட்டன. தோசைக் கல்லில் வெகுநேரம் கிடந்த தீஞ்சுபோன தோசை போல் நம் தோல் 100 டிகிரியில் வேகப் போகிறது.
எத்தனையோ பாத்துட்டோம் இதப் பாக்க மாட்டோமா அப்படி ஒரு ஓவர் கான்பிடன்ட் தான் நமது இப்போதைய தேவை. தலைக்கு ஒரு வெள்ளைக் காட்டன் தொப்பி வாங்கிக் கொள்ளுங்கள். தண்ணீர்ப் பழங்கள் , வெள்ளரிப் பிஞ்சுகள் உங்கள் பிரிட்ஜ்-ஐ நிறைக்கட்டும். கருப்பு நிறத்தில் நீங்கள் வைத்திருக்கும் அனைத்து வகை ஆடைகளையும் பீரோவின் அடுக்கு ஒன்றில் வைத்து சாவியை தொலைதூர உறவினருக்குக் கொரியர் அனுப்பி விடுங்கள். கருப்பு ஆடை வெயிலை ஈர்க்கக் கூடியவை. அவை அறவே வேண்டாம்.
வாசிங் மெஷின்,கம்ப்ரசர் மோட்டார்,ஏசி மெஷின் போன்றவற்றை சர்வீஸ் செய்து அவற்றின் சீரான இயக்கத்திற்கு உறுதி மொழி வாங்கிவிடுங்கள். காரணம் எல்லா நாளும் இருமுறை குளிக்க வேண்டும். ஆடைகளை எல்லா நாளும் துவைக்க வேண்டும் ( ஜீன்ஸ் உட்பட). எல்லா நாளும் ஏசி போட்டு மட்டுமே உயிரைக் காப்பாற்ற வேண்டும்.
மறக்காமல் மினரல் வாட்டர் கொண்டு வரும் பையனை IPL கிரிக்கெட்டுக்கு டிக்கட் வாங்கிக் கொடுத்தாவது கரெக்ட் பண்ணி வைச்சுக்கோங்க. வியர்வைக்கு ஈடாக உடம்பு தண்ணீருக்காகத் தவிக்கும் . வழக்கத்தைக் காட்டிலும் தண்ணீர் அதிகமாகத் தேவைப்படும். வீட்டில் மசாலாப் பொடி போட்டு வைக்கும் டப்பாவைத் தெரியாமல் உடைப்பது போல உடைத்து விட்டு அளவில் சிறிய டப்பா ஒன்றை அதற்கு ஈடாக வாங்கிக் கொடுத்து விடுங்கள். வெயிலோடு காரமும் உணவோடு சென்றால் உடம்புக்குள் ஒரு கிங்காங் புகுந்து உள்ளிருந்து ஆவேசமாக டிரைலர் காட்டும் . நீங்கள் வழக்கமாக அடிக்கும் சரக்கு பாட்டில்களைத் தூக்கி எறியாமல் நன்றாகக் கழுவி முடிந்த அளவு அதில் இளநீரை நிரப்புங்கள். “கூல் பீரை விட மோரே உகந்தது” என்று வாசகம் எழுதி நீங்கள் பல்தேய்க்கும் போது பார்க்கும் கண்ணாடியில் ஒட்டி விடுங்கள்.
இரு சக்கரத்தை பாதுகாப்பான இடத்தில் பார்க் செய்து விட்டு பேருந்து ரயில்களில் பயணம் செய்யுங்கள். ஹெல்மெட் தொல்லையும் இல்லை. வெயிலுக்கு நேராகத் தலை கொடுப்பதையும் தவிர்க்கலாம். திரிஷா பாணியில் மதிய சாப்பாடு தயிர்ச்சோறு மா வடுவாக இருக்கட்டும். உங்கள் நாக்கைக் கட்டுப்படுத்தும் பருமனுள்ள கயிறாகப் பார்த்து வாங்கி வாயைக் கட்டிவிடுங்கள். இப்படி செய்ய வேண்டியதைச் செய்து கோடைகாலத்தில் உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள். இன்னும் மூன்று மாதங்களுக்கு உங்களுக்கான வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இதோ “ கோடையும் கடந்து போகும்”
0 Comments