மதுப்பிரியர்களின் ஒரே கேள்வி - கடை எப்போது திறக்கும்? ( When will the bar open?)

    நமது இயல்பு வாழ்க்கையைத் துவைத்துக் காயப்போட்ட கொரனாவை நம்மைக் காட்டிலும் வெறுத்து, வெறித்து அலைகிறார்கள் மதுப்பிரியர்கள். ஊரடங்கினால்  பலவிதமான துன்பங்களைப் பலரும் அனுபவிக்கிறார்கள் என்றாலும்  மதுப்பிரியர்களின் கதி அதோ கதியாகி இருக்கிறது. சரக்கடிப்பவர்களுக்குக் கொரனா வராது என்ற வதந்தி பரவிய போது உலகில் புதிதாய் பிறந்தவர்களைப் போல் உற்சாகச் சிறகு விரித்து புதிய வானத்தில் மிதந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் நடை,உடை , பாவனையில் நோய் வென்ற பெருமிதம் தாண்டவமாடியது.
        அதற்கு மருத்துவ ஆதாரம் இல்லை என்று அறிக்கை வெளியான பிறகும் அதைக் குடிப்பழக்கம் இல்லாதவர்கள் சேர்ந்து செய்த சதியாகத்தான் பார்த்தார்கள். மது பாட்டில்களின் தலையைத் தட்டுவது போல் அடித்துச் சொன்னார்கள், மதுக்கடைகளை அரசு மூடவே மூடாது என்று. உச்ச போதையை ஒரு நொடியில் இறக்குவது போல் மதுக்கடைகளும் மூடப்படும் அறிவிப்பை மார்ச் 23 ஆம் தேதி மாலை அரசு அறிவிக்க, ராவாக அடிக்கும் போது வருமே ஒரு முகச்சுழிப்பு அது அப்படியே  நிரந்தரமாக நிலைத்து விட்டது அவர்களின் முகத்தில். கையிலிருந்த காசோடு கொஞ்சம் காசைப் புரட்டி, வீட்டுச் சட்டி பானைகளை உருட்டி கொஞ்சம்“ முன்னெச்சரிக்கை” நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை தொடரும் என்ற அறிவிப்பு இடியாகத் தலையில் இறங்க  இடிந்து போனார்கள்.
       கொஞ்சமும் எதிர்பாராத இந்தப் பிரச்சினையால் இப்போது நிலை குலைந்து துன்பப்படுகின்றனர். அவர்கள் படும் பாட்டைக் கண்டு அவர்கள் குடும்பமும் செய்வதறியாது திகைத்து நிற்கிறது. கேரளாவில் தற்கொலைகள் பெருக, கொரனாவில் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட மது கிடைக்காத தற்கொலைச் சாவுகளைத் தடுக்க வேண்டிய கட்டாயம் கேரள அரசுக்கு ஏற்பட்டது. மருத்துவர்கள் பரிந்துரைத்தால் மது வழங்கப்படும் என்று கேரள முதல்வர் அறிவிக்க, மருத்துவர்கள் அதைக் கருப்பு நாளாக அறிவித்தனர். தமிழகத்திலும் வித விதமான இறப்புச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.போதைக்காக  வார்னிசைக் குடித்து மூன்று பேர் உயிர் விட்டனர். சேவிங் லோசனில் போதை கிடைக்கும் என நம்பி அதைக் குடித்து இருவரின் உயிர் போய்விட்டது. ஒருவர் கிணற்றுக்குள் இறங்கிச் சரக்கு வாங்கிக் கொடுத்தால்தான் மேலே வருவேன் என பேரிடர் மீட்புக் குழுவினரைப் பாடாய் படுத்தி விட்டார். 
     டாஸ்மாக் கடைகளில் சிலர் கொள்ளை அடிக்க,  பாட்டில்களை பத்திரப்படுத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. குடோனுக்கு மாற்றப்படும் போதே கள்ளச்சந்தையில் கொள்ளை விலைக்கு விற்கப்பட்டது. புதையலைப் போல மதுபாட்டில்களை மண்ணுக்குள் புதைத்து போலீஸ்காரர்கள் அடித்துப் புரட்ட, ஒவ்வொன்றாக வெளியில் எடுத்து வைக்கும் காட்சியைச் செய்தித் தொலைக்காட்சிகளில் பார்க்க முடிகிறது. கள்ளச் சாராயம் மீண்டும் பெரிய கேன்களில் தென்படத் தொடங்கியிருக்கிறது. குடியை ஒழுக்கப் பிரச்சினையாகவே இன்னும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதை உடல்,மனப் பிரச்சினையாகக் கருதி, மருத்துவ உதவி வழங்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். நடமாடும்  மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப் பட வேண்டும். கொரனா தடுப்புப் பணிகளோடு இதையும் கவனிக்க வேண்டும். குடும்பத்தின் அன்பும் ஆதரவும் அதிகமும் தேவை என்பதைச் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களின் நலம் விரும்பிகள் எடுத்துரைக்க வேண்டும். குடிப் பழக்கம் கொண்டோரும் இப்படிப் பட்ட சூழலை வரமாகக் கருதி அதிலிருந்து வெளி வரும் முயற்சியில் இறங்க வேண்டும்.
       குடும்ப சுகாதாரமும் குடும்ப பொருளாதாரமும் அதனால் வளம் பெறும். நிரந்தரப் பயனையும் அது தரும். மருத்துவர் பரிந்துரைப்படி ரேசன் கடைகளில் ஒரு குறிப்பிட்ட அளவை நிர்ணயித்து இப்போது வழங்கும் விலைக்கே வழங்கலாம் என்று சிலர் ஆலோசனை வழங்குகின்றனர். வீடடிற்குத் தெரியாமல் திருட்டுத்தனமாகக் குடிப்பவர்களை அது கட்டுப்படுத்தும். புதிய குடிகாரர்கள் உருவாகும் வாய்ப்பும் குறையும். குடிகாரர்களை விட குடிநோயாளிகள்தான் இன்று பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள். மருத்துவ உதவியும் மனநல ஆலோசனையும் குடும்பத்தின் கனிவும் அவர்களை மீட்கும். அரசும் கொரனாவை விடக் கொடிய குடிநோயை இச்சூழலைப் பயன்படுத்தி ஒழிக்க முன் வர வேண்டும். அப்படி நடந்தால் நம்மைப் பிடித்த பெரும் பீடையிலிருந்து தப்பமுடியும். 

மேலும் படிக்க...
https://slatekuchi.blogspot.com/2020/04/corona-lovers-lock-down-violators.html
https://slatekuchi.blogspot.com/2020/04/benefits-of-corona-virus-take-positive.html
https://slatekuchi.blogspot.com/2020/03/summer-tips-of-common-man.html
https://slatekuchi.blogspot.com/2020/03/save-from-coronavirus.htm

Post a Comment

0 Comments