கொரனா என்னதான் கொடிய வைரஸ் என்றாலும் அதன் பாஸிட்டிவ் சைடையும் பார்க்க வேண்டாமா பாஸ்?. நம்ம கொஞ்சம் அப்பிடிக்கா போய் யோசிச்சுப் பாத்தா ரணகளத்தின் கிளுகிளுப்பை அனுபவிக்க முடியும். தனிமனிதன் அளவில் கொரனா தந்திருக்கும் கொடைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒவ்வொரு நாளும் நம் உடம்பு கெஞ்சிக் கொண்டிருந்த தூக்கத்தை அன்லிமிடெட் ஆக அள்ளி வழங்கியிருக்கிறது கொரனா. நாம் தான் நம் பிள்ளைகளுக்கு பெற்றோராக இருக்கிறோம் என்பதை நிதானமாக உணர வைக்கிறது நம் செல்லக்குட்டி கொரனா. குடும்பத்தோடு நமது குப்பைகளையும் சுமந்து பொலிவிழந்த நம் வீடு பளபளப்பாகி கிளாமர் காட்டக் காரணமானது கொரனா. பெத்தவங்களோடு நம்மை மனம் விட்டுப் பேச வைத்து நம் முதியோர்களின் பொக்கை வாயில் க்ளோசப் புன்னகை பொங்கி வரக் காரணமானது இந்தக் கொடூரக் கொரனா. சக பணியாளர்களின் சிடு மூச்சிப் பார்வையிலிருந்து தப்பிப் பிழைக்க வைத்தது கிருமிக் குட்டி கொரனா. பெட்ரோல் புகைகளில் இருந்து நம் மூக்கைக் காப்பாற்றி போக்குவரத்து நெரிசலால் சூடான நம் மூளையைக் காப்பாற்றி பெட்ரோல் செலவால் எகிறி அடித்த நம் இதயத்தைக் காப்பாற்றி உயிர்க் கொல்லிப் பட்டத்தோடு உலவிக் கொண்டிருக்கிறது கொரனா.
திடக்கழிவு, மூன்றில் ஒரு பங்கு குறைந்து போனது . சுற்றுச்சூழல் சுத்தமானது. நல்ல காற்று நமக்கு சுவாசிக்கக் கிடைத்தது. நகரங்கள் தேக்கி வைத்த நூற்றாண்டு அழுக்குகள் துடைத்தெறியப் பட்டன. அரசு மருத்துவமனைகள் மறுபிறவி எடுக்கின்றன. பாக்டீரியாக்களைத் தோல் போலவே சுமந்திருந்த நம் கைகள் அடிக்கடி சுத்தமாகின்றன. சரக்கு அடிக்காமலும் நாம் உயிர் வாழ முடியும் என நம்மை நம்ப வைத்திருக்கிறது கொரனா. இறைவன் வழிபாட்டு இடங்களில் மட்டும் இருப்பதில்லை என்ற பகுத்தறிவு பெற்றோம். பால்காரர், காய்கறி விற்று வருபவர், சிலிண்டர் டெலிவரி பாய்... இப்படி நாம் பெரிதாகக் கண்டு கொள்ளாமல் இருந்தவர்களின் மதிப்பை உணரச் செய்தது கொரனா.
காவல் துறை கையெடுத்துக் கும்பிடவும் செய்யும் கம்பை வைத்து நம்மைக் கவனிக்கவும் செய்யும் என்பது “சுரீர்” என இப்போதுதான் உறைக்கிறது. சிறுபிள்ளைகள் தாங்கள் சேமித்து வைத்த உண்டியல் காசைமாவட்ட ஆட்சியரிடம் வழங்கி மகிழ்ந்து குலுங்குகிறார்கள். வயது முதிர்ந்தவர்கள் கையில் உணவுப் பொட்டலங்களைப் பெற்றுக் கொண்டு கண்ணீரோடு நன்றி சொல்கிறார்கள்.
ஊரடங்கில் அடங்கி வாழ்பவர்களை முதலமைச்சரும் பிரதமரும் வாழ்த்துகிறார்கள். சட்டத்தைப் பட்டமாகக் கருதி காற்றில் பறக்கவிட்டவர்களும் வாசலில் நின்று கைதட்டி உயிர் கொடுத்தேனும் உயிர் காக்கத் துணிந்த மருத்துவர்களைக் கௌரவிக்கிறார்கள்.அரசியல் அரட்டைகள் குறட்டைவிட்டுத் தூங்கத் தொடஙகிவிட்டன. நாம் தொலைத்து விட்டுத் தேடியலைந்த ”பொறுப்பு” நம்மோடு சிக்கென ஒட்டிக் கொண்டது. நமக்காக அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஓய்வின்றி உழைக்கும் காணக் கிடைக்காத சரித்திர அதிசயம் நிதர்சனமானது. வட்டி வாங்கி நம்மை வாட்டி வதைத்த தனியார் நிதி நிறுவனங்களின் வறண்ட இதயங்களில் ஈரம் சுரக்கிறது. இதயத்தால் விலகி உடலால் நெருங்கி இருந்த பலர் சினிமா வில்லனைப் போல திடீரென்று திருந்தி விட்டார்கள்.
https://slatekuchi.blogspot.com/2020/04/benefits-of-corona-virus-take-positive.html
https://slatekuchi.blogspot.com/2020/03/summer-tips-of-common-man.html
https://slatekuchi.blogspot.com/2020/03/save-from-coronavirus.htm
0 Comments